செங்கல்பட்டு அருகே திடீரென் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் பள்ளி, கல்லூரி, வேலைக்காக மின்சார ரயில்களில் செல்வோரும் கடும் சிரமம் அடைந்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இன்று காலை சுமார் 7 மணியளவில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் மதுரை, கன்னியாகுமாரி உள்பட பல்வேறு தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், சென்னைக்கு வந்த பயணிகள், நடு வழியில் இறங்கி பஸ் மற்றும் கார்கள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த ரயில்கள் மதுராந்தகம், மேல் மருவத்தூர், படாளம் உள்பட பல இடங்களில் நிறுத்தப்பட்டன. அதேபோல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் எழும்பூரில் நிறுத்தப்பட்டன. 

அதே நேரத்தில், செங்கல்பட்டில் இருந்து மறைமலைநகர், தாம்பரம், குரோம்பேட்டை, கிண்டி உள்பட சென்னையின் பல இடங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவித்தனர். தகவலறிந்து ரயில்வே பொறியாளர் குழுவினர் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, சிக்னலில் ஏற்பட்ட பழுதை சீரமைத்தனர். இதையடுத்து சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின், ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.