மறையூர்
மறையூரில், மூன்று மாதங்களுக்கு முன்னர் நோய் தாக்கியதால் சிகிச்சை அளிக்கப்பட்ட காட்டுயானை, நோய் முற்றியதில் இறந்தது.
இடுக்கி மாவட்டம் மறையூர், பட்டிக்காடு, கீழாந்தூர், கரிமுட்டி, இந்திராநகர், வெட்டுக்காடு, இடகடவு, சந்திரமண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கரும்பு, வாழை மற்றும் காய்கறி பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.
இந்த பகுதிகளில் கடந்த சில நாள்களாக காட்டுயானை புகுந்து அட்டகாசம் செய்தது.
இதனால் தொழிலாளர்கள் தோட்டத்திற்கு வேலைக்கு கூடச் செல்ல முடியாமல் தவித்தனர். மேலும் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரினர்.
இந்த நிலையில் சனிக்கிழமை கரிமுட்டி பகுதியில் தோட்டத்திற்குள் புகுந்த அந்த யானை பயிர்களை சேதப்படுத்தியது.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை அந்த யானை வனப்பகுதியில் இறந்து கிடந்தது.
இதுகுறித்து அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர். பின்னர் யானையின் உடலை கைப்பற்றி கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்தனர். இதையடுத்து உடலை வனப்பகுதியில் புதைத்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, “வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டுயானை நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த யானைக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், நோய் குணமாகவில்லை.
இதனால் கடந்த சில நாள்களாக தோட்டப்பகுதிக்குள் சுற்றி வந்துள்ளது. மேலும் வயது முதிர்வு காரணமாகவும் அவதிப்பட்டுள்ளது. இதனால் அந்த யானை இறந்துள்ளது” என்றனர்.
