உடுமலை அருகே ஒட்டுக்குளம் அருகில் தனியாரால் ஆக்கிரமித்து கரும்பு சாகுபடி செய்திருந்த நிலத்தை பொக்லைன் கொண்டு மீட்டனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.

ஒட்டுக்குளம் இது உடுமலையில் இருக்கிறது. திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் பெறும் குளங்களில் இந்த குளமும் ஒன்று. இந்த குளத்தை ஓட்டி உள்ள பகுதியில் 5.60 ஏக்கர் நிலத்தை தனியார் ஆக்கிரமித்து அதில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் கரும்பு சாகுபடி செய்து விவசாயத்தை நன்முறையில் நடத்தி வந்துள்ளனர் அந்த தனியார். முன்னரே கடிவாளம் போட்டு, நிலத்தை பாதுகாப்பதை விட்டுவிட்டு, விவசாயம் என்று இறங்கிய பின்னர், அது ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் என்று வீரம் பொங்கி, அந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க முடிவு செய்தனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.

அதன்படி வியாழக்கிழமை ஆர்.டி.ஓ.சாதனைக்குறள், மண்டல துணை தாசில்தார் இராமலிங்கம், நிலவருவாய் ஆய்வாளர் ராஜேந்திரபூபதி, பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் தன்ராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒட்டுக்குளம் பகுதியை நில அளவீடு செய்தனர். அதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 5.60 ஏக்கர் நிலம் பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர்.

இனி வேறு பகுதியிலும் குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா? என்று கண்டறியப்படும் என்று ஆர்.டி.ஓ.தெரிவித்தார்.