shops closed protest against central government Rs 10 crore trade affect in Karur in one day
கரூர்
மத்திய அரசை எதிர்த்து கரூரில் கடைகள் அடைக்கப்பட்டதால் ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிப்படைந்தது. பேருந்துகள் வழக்கம்போல ஓடினாலும், பயனிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மத்திய அரசை எதிர்த்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் நேற்று தி.மு.க. தலைமையில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. மேலும், போராட்டத்திற்கு வணிகர் சங்க பேரவையினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
கரூர் மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கரூரில் ஜவகர் பஜார், கோவை சாலை, தாந்தோன்றிமலை கடை வீதி, வெங்கமேடு, பசுதிபாளையம் உள்ளிட்ட இடங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தன.
காலையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. கரூர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகள் பெரும்பாலும் மூடியிருந்தன. பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள மார்க்கெட் கடைகள் திறக்கப்படவில்லை.
தொ.மு.ச. உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. எனினும், போக்குவரத்து அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்திருந்தனர்.
கரூர் திருமாநிலையூர், அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய பணிமனைகளில் இருந்து அரசு பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன. கரூர் மண்டத்தில் 271 அரசு பேருந்துகளும் வழக்கம்போல இயக்கப்பட்டது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் வழக்கம்போல புறப்பட்டுச் சென்றன. ஆனால், முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஒரு சில தனியார் பேருந்து மட்டும் இயங்கவில்லை. மினி பேருந்துகளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் இயங்கியது. ஆட்டோ, சுற்றுலா வேன் ஆகியவை பாதிக்கு மேல் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
க.பரமத்தி, தென்னிலை, சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், தரகம்பட்டி, லாலாப்பேட்டை, வேலாயுதம்பாளையம், நொய்யல், உப்பிடமங்கலம், தோகைமலை, நச்சலூர், நங்கவரம், நெய்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
இந்த முழு அடைப்பு போராட்டத்தினால் மக்கள் இயல்பு வாழ்க்கை எதுவும் பாதிப்பு ஏற்படவில்லை. மாவட்டம் முழுவதும் பலத்த காவல் பாதுகாப்புகள் போடப்பட்டிருந்தன. மாவட்டத்தில் 75 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதாக காவலாளர்கல் தெரிவித்தனர். கடையடைப்பால் கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிப்படைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
