ஓசூர்:
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிராக, சொத்து குவிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டதால் கர்நாடகா, தமிழக எல்லைகளில் இன்றும் காவல்துறை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடகா சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை, உச்சநீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.
அத்துடன், பெங்களூரு நீதிமன்றத்தில், அறை எண் 48-ல், சசிகலா உட்பட மூவரும் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இதனால் கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் தமிழக எல்லையான ஓசூர் ஆகிய பகுதியில், நேற்று காலை முதல் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
எனினும், சேலம், சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஓசூர் வழியாக கர்நாடகா மாநிலத்திற்குச் செல்லும் தமிழக அரசு பேருந்துகள் மற்றும் கர்நாடகாவில் இருந்து, ஓசூர் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் கர்நாடகா அரசு பேருந்துகள் எந்த வித இடையூறும் இன்றி தொடர்ந்து இயக்கப்பட்டன.
லாரி உள்ளிட்ட அனைத்து சரக்குந்து வாகனங்களும், கர்நாடகா மாநிலம் சென்று வந்தன.
தமிழகம், கர்நாடகா எல்லையில், பாதுகாப்பு காரணங்களுக்காக, 25-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் ஆங்காங்கு தற்போதும் பாதுக்காப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஓசூரில் கடையடைப்பு, வன்முறை போன்ற எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாறாக, சசிகலாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம்,, இராயக்கோட்டை, சூளகிரி உட்பட பல்வேறு பகுதிகளில், முன்னாள் அமைச்சர் முனுசாமியின் ஆதரவாளர்கள், ஜெ.தீபா பேரவையினர், திமுகவினர் என அனைவரும் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் அதனை கொண்டாடினர்.
இருந்தும், சசிகலா கர்நாடகா நீதிமன்றத்திற்கு செல்லும் வரை எந்த வித அசாம்பாவிதங்களும் தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்று காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் பணியாற்றுகின்றனர்.
