கரூர்,

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதில், காவல்துறையினர் உஷாராக இருந்து கரூரில் முக்கியமான பகுதிகளில் காவல் பாதுகாப்பு போடப்பட்டதால் , அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட மூன்று பேரும் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு தண்டனை வழங்கி டெல்லி உச்ச நீதிமன்றம் நேற்று காலை தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோ, துணை கண்காணிப்பாளர் கும்மராஜா தலைமையில் நேற்று காலையில் இருந்து கரூர் பேருந்து நிலையம், கலங்கரை விளக்கம் முனை, தேவாலயம் முனை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தீர்ப்பு வெளியானதும் கரூர் நகரில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காவலாளர்கள் உஷார் அடைந்தனர். இதனால், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

கரூரில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. கடைகள் திறந்து இருந்தன. பொதுமக்கள் வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சீராக இருந்தது.

இந்த நிலையில் அதிமுக கரூர் ஒன்றிய இளைஞர், இளம் பெண்கள் பாசறை துணை செயலாளர் சுரேஷ், காக்காவாடி ஊராட்சி செயலாளர் தினேஷ் ஆகியோர் உள்பட முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பலர் தீர்ப்பை ஆதரித்து கரூர் - கோவை சாலையில் திடீரென்று பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

அப்போது நீதி வென்றது என்பது உள்பட பல்வேறு முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்று எடுத்துக் கூறியவுடன் அவர்களே அங்கிருந்து கலைந்தனர்.