Sexual harassment to a 14-year-old girl Treasury Officer Arrested ...

சிவகங்கை

சிவகங்கையில், வீட்டுக்கு வேலை செய்ய வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த சார்நிலை கருவூல அலுவலரை காவலாளர்கள் கைது செய்தனர்.

சிவகங்கையைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (52). இவர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் சார்நிலை கருவூல அலுவலராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில், அதே வளாகப் பகுதியில் இவரது வீடு உள்ளது. சிவகங்கை நகராட்சி துப்புரவு பணியாளர் குடியிருப்பைச் சேர்ந்த 14 வயது சிறுமி இவரது வீட்டுக்கு வேலை பார்க்க சென்றார். 

அந்த சிறுமிக்கு கடந்த 6 மாதத்திற்கும் மேலாக பாலியல் தொல்லை கொடுத்துவந்தாராம் இந்த ராஜ்குமார். 

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்சியர் உத்தரவின்பேரில் சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்கண்ணு விசாரணை நடத்தினார். 

அந்த விசாரணையில் சிறுமிக்கு ராஜ்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதையடுத்து, சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்கண்ணு கொடுத்த புகாரின்பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவலாளர்கள் வழக்குப் பதிந்து சார்நிலை கருவூல அலுவலர் ராஜ்குமாரை கைது செய்தனர்.