Seventeen-year-old girl married Officers stopped by the information The groom and the action on the parent ...
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் பதினேழு வயது சிறுமிக்கு 27 வயது ஆணுடன் நடக்க இருந்த திருமணத்தை தகவலின்பேரில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி மணமகன் மற்றும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், வடமாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜி.ரோஸ்குமார் மகன் குணசேகர் (27).
இவருக்கும், போளூர் வட்டம், எட்டிவாடி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடத்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, ஆரணியை அடுத்த களம்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று பெண் அழைப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து, புதன்கிழமை (இன்று) திருமணம் நடத்த திட்டம் போட்டிருந்தனர்.
இந்த நிலையில், திருமண வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அந்த தகவலை உறுதி செய்ய மாவட்ட நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜசேகரன், மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டினாஆகியோர் தனியார் மண்டபத்திற்கு நேற்று சென்றனர்.
அந்த மண்டபத்தில் விசாரித்ததில் கிடைத்த தகவல் உண்மை என்று உறுதிச் செய்யப்பட்டது. பின்னர், திருமணம் நடத்தப்பட இருந்த சிறுமியை அதிகாரிகள் மீட்டனர்.
மேலும், மணமகன், அவரது பெற்றோரை பிடித்து களம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
