setup boxes not work People complain that the government can not give it in quality
தேனி
தேனியில் அரசு செட்டாப் பாக்ஸ் வேலை செய்யாததால் அதிருப்தி அடைந்த மக்கள் ஒரு செட்டாப் பாக்ஸை கூட அரசால் தரமாக கொடுக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டினர்.
தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி. சேவை வழங்குவதற்காக விலையில்லா செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டன. இவற்றை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொருத்தி வருகின்றனர். இதற்காக அரசு ரூ.200 கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தேனி மாவட்டம், போடியில் சில பகுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற பகிரங்க புகார் எழுந்துள்ளது.
மேலும், போடி பகுதியில் கீழத்தெரு, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தியுள்ள செட்டாப் பாக்ஸ்கள் சரியாக இயங்கவில்லை என்றும் எந்த தொலைக்காட்சி சேனலும் சரியாக தெரியவில்லை என்றும் மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
அரசு தரும் செட்டாப் பாக்ஸ்களிலேயே இதுபோன்று குறைபாடு இருப்பதால் வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் செட்டாப் பாக்ஸ்களை வாங்கி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சில இடங்களில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் அரசு செட்டாப் பாக்ஸ்கள் சரியாக வேலை செய்யாது என்று தாமாகவே கூறி அதிக கட்டணம் பெற்று தனியார் செட்டாப் பாக்ஸ்களை பொருத்துகின்றனர்.
இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் தொலைக்காட்சி சேனல்களை பார்க்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எங்களுக்கு இருக்கும் ஒரே சந்தோஷம், பொழுதுபோக்கு டிவி மட்டுமே. இப்போது அதிலும், அரசு மண்ணைப் போட்டுவிட்டதே! என்றும் ஒரே செட்டாப் பாக்ஸை கூட அரசால் தரமாக கொடுக்க முடியவில்லை என்றும் மக்கள் நொந்துக் கொள்கின்றனர்.
மேளும், வேலை செய்யாத செட்டாட் பாக்ஸ்கள் எங்களுக்கு வேண்டாம்! அதனை மாற்றி தர மாவட்ட கேபிள் டி.வி. நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
