செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஜன.8ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை ஜனவரி 8ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

Senthil balaji bail plea in chennai principal sessions court case adjourned to january 8th smp

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கையை அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. இதனையடுத்து, செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் தர முடியாது என கூறி அவருக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும், மருத்துவ ஜாமீன் மனுவை திரும்பப் பெற்று, வழக்கமான ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறும், அங்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

பொங்கல் பரிசாக ரூ.2,000 வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

அதன்படி, செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் கோரி 3ஆவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனு குறித்து பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, அமலாக்கத் துறை பதிலளிக்க அவகாசம் அளித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி 8ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios