சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ் செம்மொழி அலுவலகம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழத்துக்கு மாற்றும் முடிவு ஏதும் மத்தியஅரசுக்கு இல்லை. யார் மீதும், எந்த மொழியையும் திணிக்க முயற்சிக்கமாட்டோம் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்தது.

கடந்த 2004ஆம் ஆண்டு தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதையடுத்து, பெங்களூரில் இருந்த தமிழ்ச் செம்மொழி அலுவலகம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இயங்கி வருகிறது.

மேலும், சென்னைக்கு அருகே பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசு தமிழ்ச் செம்மொழி நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஒரு துறையாக இணைக்க முடிவு செய்ததாக தகவல்கள் வௌியாகின. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது

இந்நிலையில், மாநிலங்கள் அவையில் நேற்று கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிச் செயலாளர் டி. ராஜா இந்த விவகாரம் தொடர்பாக பேசினார்.

அவர் பேசுகையில், “ சென்னையில் செயல்பட்டுவரும் செம்மொழி தமிழ் உயர் ஆய்வு நிறுவனம், திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதை கடுமையாக எதிர்க்கிறோம். மத்திய அரசு இரு மொழிகளுக்கு(இந்தி,சமஸ்கிருதம்) மட்டும், மத்திய அரசு தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து சிறப்பு அந்தஸ்து அளித்துள்ளது. இதை மற்ற மொழிகளுக்கும் தர வேண்டும்.

சென்னையில் செயல்பட்டுவரும் செம்மொழி ஆய்வு மையம் சுய ஆட்சியுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர் பேசுகையில், “ நாட்டில் உள்ள அனைத்து மொழிகளையும் மத்திய அரசு மதிக்கிறது. யார் மீதும் எந்த மொழியையும் திணிக்க முயற்சிக்கமாட்டோம். சென்னையில் செயல்பட்டுவரும் செம்மொழி ஆய்வு மையத்தை திருவாரூக்குமாற்றும் முடிவை அரசு எடுக்கவில்லை.

இதுகுறித்து மக்கள் பலவிதமாக விவாதிக்கிறார்கள், கருத்து தெரிவிக்கிறார்கள், ஆனால், மத்திய அரசு எந்த முடிவும் இது தொடர்பாக எடுக்கவில்லை’’ என்றார்.