கருப்பு பண ஒழிப்பின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் சிக்கி சின்னாபின்னமானவர்களில் முக்கியமானவர் தமிழக மணல் குவாரி பிரமுகர் சேகர் ரெட்டி.

வருமானவரி துறை, அமலாக்க துறை, சிபிஐ ஆகிய மூன்று மத்திய அரசு துறைகளில் கிடுக்குப்பிடியில் மாட்டிகொண்ட சேகர் ரெட்டியால் அவரது கூட்டாளிகளான பிரேம் குமார், ஸ்ரீனிவாசலு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் சேகர் ரெட்டியின் தொழில் கூட்டாளிகளான மணல் வியாபாரிகள் திண்டுக்கல் ரத்னம், புதுகோட்டை ராமசந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த இடியாப்ப சிக்கலில் தான் முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவும் சிக்கி கொண்டார்.

சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டு 10 நாட்கள் ஓடிவிட்ட நிலையில் இவர்கள் அனைவருக்கும் சிறையில் 'A' வகுப்பு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

சிறையில் ராஜவாழ்க்கை வாழ்ந்துவரும் இவர்கள் தற்போது மீண்டும் வெளியில் சாவகாசமாக உலவுவதற்காக ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனுக்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதி விஜயலட்சுமி ஜாமீன் மனு மீதான விசாரணையை நடத்தினார்.

விசாரணை முடிந்தபின் 5 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.

அதே போன்று சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால் சேகர் ரெட்டி உள்ளிட்ட தமிழகத்தின் மணல் பெருச்சாளிகள் இன்னும் சிறிது காலத்திற்கு சிறையில் இருக்கவேண்டியது கட்டாயமாகிறது.