கடந்த சில நாட்களுக்கு முன் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பல கோடி பணம், நகை, ஆவணங்கள் சிக்கியது. இதைதொடர்ந்து அவரை சிபிஐ கைது செய்தது.

இதை தொடர்ந்து அவரது உறவினர்கள், நண்பர்கள் என பலரது வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி, ஏராளமான ஆவணங்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரின் வீடு அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

புதுக்கோட்டையில் ராமச்சந்திரனின் வீடு, அலுவலகம் என 4 இடங்களில் சோதனை நடந்தது. மணல் குவாரி கணக்குகளை பார்க்கும் நிஜாம் காலனி அலுவலகத்தில் சோதனை செய்தபோது, பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அதில் ராமச்சந்திரன் கட்டுப்பாட்டில் உள்ள மணல் குவாரிகள் அடங்கியுள்ள மாவட்டங்களில் செயல்படும் பத்திரிகைகள், டிவி சேனல்கள் நிருபர்களுக்கு மாதந்தோறும் பணம் கொடுத்ததாக கணக்கு எழுதப்பட்டு இருந்தது. காரணம், மணல் குவாரி அத்துமீறல் குறித்து செய்தி வெளியிடாமல் இருக்க வேண்டும் என பணம் கொடுக்கப்பட்டதாக தெரியவந்தது.

ஒவ்வொரு பத்திரிகை, டிவி சேனல்களுக்கு தரம் பார்த்து பணம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ-2000 முதல் ரூ.10 ஆயிரம் வரை நிருபர்கள் பெற்றுள்ளனர். மேலும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் ஒரு செட் டிரஸ், ரூ.5000 போனஸ் வழங்கியுள்ளனர்.

இதில் பத்திரிகை நிருபர்களைவிட டிவி சேனர் நிருபர்கள், அதிகளவில் பணத்தை பெற்றுள்ளனர். புதுக்கோட்டையில் நடந்த வருமான வரித்துறையினரின் சோதனையை செய்தியாக வெளியிடாமல் இருக்க, தலா ரூ.2000 கொடுக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்த அனைத்து விபரங்களும் வருமான வரித்துறையினருக்கு தெரிந்துள்ளதால், பத்திரிகை மற்றும் டிவி சேனல் நிருபர்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.