யாரும் குறை கூற முடியாத ஆட்சியா.? தமிழகம் சாதிக் கொடுமை அதிகம் நடைபெறும் வன்முறை கூடாரமாகிவிட்டது- சீமான்
சமூக நீதி காக்கும் திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு சாதியக் கொடுமைகளைத் தடுக்காது கைகட்டி வேடிக்கைப் பார்க்கும் திமுகவின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது என சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
சாதிய வன் கொடுமைகள்
சாதிய வன் கொடுமைகள் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் சாதிய வன்கொடுமை நிகழ்வுகள்பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமைகள் நிகழாத நாட்களே இல்லை எனும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் மிக மோசமான இழிநிலையை நோக்கிச் செல்கிறது. திமுக ஆட்சி அமைந்த பிறகு, ஆதித்தமிழ்க்குடியை சேர்ந்த 15 ஊராட்சிமன்றத் தலைவர்களை சுயமாகப் பணி செய்ய விடாமலும் சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாள் அன்று கொடியேற்றவிடாமலும், தடுத்து அவமதிப்பது,
தொடரும் தீண்டாமை
2021 நவம்பர் மாதம் நாகர்கோவிலிலும், 2022 ஜூன் மாதம் கும்பகோணத்திலும், 2023 மார்ச் மாதம் கிருஷ்ணகிரியிலும் நடைபெற்ற ஆணவப்படுகொலைகள், பள்ளிகளில் சாதி அடையாளத்தைக் குறிக்கும் கயிறுகளை மாணவர்கள் கட்டிவர அனுமதித்து சாதிப் பிரிவினையை தூண்டுவது, தஞ்சாவூர் மாவட்டம், கிளாமங்கலத்தில் இரட்டைக்குவளை முறையைப் பின்பற்றித் தீண்டாமையைக் கடைப்பிடித்தவர்களை கைது செய்யாதது, 2022 செப்டம்பர் மாதம் தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் நடைபெற்ற சாதிய மோதல், திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சாதிவெறி தாக்குதல், 2023 ஜனவரி மாதம் பொங்கல் விழாவின்போது கடலூர் மாவட்டம் சாத்துக்கூடல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள்,
தொடரும் சாதிய பாகுபாடு
கடலூர் மாவட்டம் கீழ்ச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி சாதியப் பாகுபாடு காரணமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன் தனது இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற அவல நிகழ்வு, 2023 ஜூன் மாதம் விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்குள் ஆதித்தொல் குடிமக்கள் செல்ல அனுமதி மறுத்து கோயிலை முத்திரையிட்டு மூடியது, 2023 ஆகஸ்ட் மாதம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் தம்பி சின்னதுரை, மற்றும் அவரது தங்கையின் மீது சாதிவெறியர்கள் வீடுபுகுந்து கொலைவெறித் தாக்குதல், 2022 மார்ச் மாதம் சாதிரீதியாக இழித்துரைத்து, பலமுறை அவமதித்ததாக அமைச்சர் இராஜகண்ணப்பன் மீது முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் புகாரளித்தது,
2023 ஜனவரி மாதம் சேலம் மாவட்டம் திருமலைகிரியில் கோவிலுக்குள் நுழைந்தற்காக பிரவீண் என்ற இளைஞரை தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாணிக்கம் பொதுமக்கள் முன்பாக சாதிப்பெயரைச் சொல்லி திட்டிய கொடும் நிகழ்வு, எல்லாவற்றிற்கும் மேலாக வேங்கைவயலில் ஆதித்தமிழ்க்குடிகள் பயன்படுத்தும் குடிநீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவை கலந்து ஓராண்டு நெருங்கும் நிலையிலும் இன்றுவரை குற்றவாளிகளைக் கைது செய்யாமல் அக்கொடிய மனித பேரவலத்திற்குத் துணை நிற்பது என திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிகழும் சாதிய வன்கொடுமைகள் வார்த்தைகளில் சொல்லி மாளாது.
யாரும் குறை சொல்ல் முடியாத ஆட்சியா.?
அந்த வகையில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நெல்லை மாவட்டம் மணி மூர்த்திஸ்வரத்தைச் சேர்ந்த மனோஜ், மாரியப்பன் ஆகிய இரண்டு பட்டியல்பிரிவு இளைஞர்கள் மீது ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த 6 பேர் சிறுநீர் கழித்து, நிர்வாணப்படுத்தி கடுமையாகத் தாக்கியுள்ள நிகழ்வு திமுக ஆட்சியில் தொடர்ந்து வரும் சாதியக் கொடுமைகளின் உச்சமாகும்.
அதே நாளில் திருநெல்வேலி ஆட்சிமடம் பகுதியில் மற்றுமொரு பட்டியல்பிரிவு இளைஞரும் சாதியின் பெயரால் தாக்கப்பட்டுள்ள கொடும் நிகழ்வும் அரங்கேறியுள்ளது வெட்கக்கேடானது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இத்தகைய சாதிய வன்கொடுமைகளைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காது, யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சியை நடத்தி வருகிறோம் என்று முதலமைச்சர் கூறுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
சட்டப்படி நடவடிக்கை தேவை
ஆகவே, சமூக நீதி ஆட்சி, சமத்துவ ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி என்றெல்லாம் வெற்று வாய் வார்த்தைகள் மூலம் விளம்பர அரசியலை மட்டும் செய்துகொண்டிருக்காமல், திமுக அரசு இனியாவது ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழ்க்குடிகள் மீது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சாதிய வன்கொடுமைகள் இனியும் தொடரா வண்ணம் தடுத்திட உளப்பூர்வமான, உறுதியான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், நெல்லை மாவட்டம் மணி மூர்த்திஸ்வரத்தில் சாதிய வன்கொடுமை புரிந்தோரை கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத் தரவேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்