கோத்தகிரி,

சல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் வேண்டும் என்று போராடியவர்களை தாக்கிய காவலாளர்களால் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், சல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்கக்கோரியும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மெரினா முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு அவசர சட்டம் நிறைவேற்றி சல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தது. அதனை ஏற்க மறுத்த மாணவர்கள் நிரந்தர சட்டம் கோரி போராட்டத்தை தொடர்ந்தனர்.

நிரந்தரச் சட்டமும் நிறைவேரும் நேரத்தில், மாணவர்களின் போராட்டம் வெற்றி களிப்பைக் கொண்டாட வேண்டிய தருவாயில் காவலாளர்கள் நடத்திய தடியடி ஏராளமானோரை பலத்த காயம் அடையச் செய்தது.

ஆட்டோ, குடிசை, மோட்டார் வாகனங்கள் என ஏழை எளிய மக்களின் பொருட்களை சேதப்படுத்தி அடாவடித் தனமாக நடந்து கொண்டது.

இந்த நிலையில், மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவலாலர்களைக் கண்டித்தும், தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கும், காவலாளர்கள் சேதப்படுத்திய மக்களின் உடைமைகளுக்கும் நிவாரண உதவி வழங்கக் கோரியும் கோத்தகிரி சந்தைத் திடலில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகி ரவி தலைமை தாங்கினார். நீலமலை அனைத்து தொழிலாளர் சங்க செயலாளர் பாலன், பொருளாளர் விஜயன், மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் காவலாலர்களைக் கண்டித்தும், அதனைக் கண்டுகொள்ளாமல் விட்ட தமிழக அரசைக் கண்டித்தும் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.

முடிவில் வெங்கட் நன்றித் தெரிவித்தார்.