Sealed to a water treatment plant that functioned without a standard Owners suicide threat ...
விழுப்புரம்
விழுப்புரத்தில் தரச் சான்று இல்லாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரைஅடுத்த சு.கொல்லூர் கிராம எல்லையில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி பின்புறம், அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சிமன்ற முன்னாள் துணைத் தலைவர் எஸ்.முரளிக்குச் சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
இந்த நிலையமானது, தரச் சான்று பெறாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது. இதையடுத்து தரச் சான்று பெற்று நிலையத்தை செயல்படுத்துமாறு, உணவு பாதுகாப்புத் துறையினர் முன்னெச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும், தரச் சான்று பெறாமலேயே நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் வரலட்சுமி, நேற்று இந்தக் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பூட்டி சீல் வைத்தார்.
அப்போது, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் கணேசன், ஜெயராஜ், கதிரவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலைய உரிமையாளர், தனது குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து உடனடியாக அருகில் உள்ள அரகண்டநல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவலாளர்கள் விரைந்து வந்து, அதனைத் தடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
