கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள ஆசிப் பிரியாணி உணவு தயாரிப்பு கூடத்துக்கு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் 
வைத்துள்ளனர். சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் தயாரிக்கப்பட்டதாலும், பாதுகாப்பு துறை விதிமுறைகளை முறையாக  கையாளாததாலும், ஆசிப் பிரியாணி உணவு கூடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள ஆசிப் பிரியாணி உணவு தயாரிப்பு கூடத்தில் இருந்து பிரியாணி தயாரிக்கப்பட்டு, சென்னையின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சுமார் 20 ஆசிப் பிரியாணி கடைகளுக்கு உணவு அனுப்பப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு வந்த பல்வேறு புகாரின் அடிப்படையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆசிப் பிரியாணி உணவு கூடத்துக்கு வந்து, உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரு உணவகம் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து  பல்வேறு விதிமுறைகளை அறிவுறுத்திச் சென்றனர். 

இந்த நிலையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறிய விதிமுறைகள், கடந்த 3 மாதங்களாக பின்பற்றப்படவில்லை என்பது  தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஆசிப் பிரியாணி உணவுக் கூடத்துக்கு சென்று இன்று  ஆய்வு செய்தனர். அப்போது, உணவு பாதுகாப்பு துறை விதிமுறைகளை பின்பற்றப்படவில்லை என்றும், அதிகாரிகளின் கொடுத்த உத்தரவுகளுக்கு எந்தவித பதிலும் அளிக்காமல் ஆசிப் பிரியாணி நிர்வாகம் இருந்து வந்துள்ளது. 

இதன் அடிப்படையில், ஆசிப் பிரியாணி உணவு கூடத்துக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். முறையாக செயல்படாத ஆசிப் பிரியாணி உணவு கூடத்துக்கு, உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா, சீல் வைக்க உத்தரவிட்டதை அடுத்து அதிகாரிகள் சீல் வைத்தனர்.