Seal-collector DG Vinay warned the police against the rules

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 50 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக பாலித்தீன் பை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், "திண்டுக்கல் மாவட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட பாலித்தீன் பை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதியின் படி 50 மைக்ரான் தடிமனுக்கு அதிகமாக பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

நாளுக்கு நாள் பாலித்தீன் பை பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது சில தொழிற்சாலைகளில் 50 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக பாலித்தீன் பைகள் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் பாலித்தீன் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டபோது 50 மைக்ரானுக்கு குறைவாக பாலித்தீன் பைகள் தயாரிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதியில் கூறப்பட்டுள்ள அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்றிதான் பாலித்தீன் பைகளை தயாரிக்க வேண்டும்.

இதுகுறித்து மாவட்டம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் அவ்வப்போது ஆய்வு நடத்தப்படும். அப்போது விதிகளை மீறி பாலித்தீன் பை தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்படும் அல்லது தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைக்கப்படும்.

மேலும், வியாபார கடைகளில் 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்" என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.