Asianet News TamilAsianet News Tamil

ஆறுமுகநேரிக்கு வந்தது அறிவியல் கண்காட்சி விரைவு இரயில்; முதல் நாளில் 18 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்…

Science Exhibition is the fastest train in Arumuganeri 18 thousand people visited the first day
Science Exhibition is the fastest train in Arumuganeri 18 thousand people visited the first day
Author
First Published Jun 29, 2017, 8:58 AM IST


தூத்துக்குடி

அறிவியல் கண்காட்சி விரைவு இரயில் நேற்று தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரிக்கு வந்தது. இந்த இரயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்டனர். அவர்களுக்கு அறிவியல் தொடர்பான படங்கள், காட்சிகளையும் வல்லுனர் குழுவினர் தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கிக் கூறினர்

இந்திய இரயில்வே சார்பில், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் அறிவியல் கண்காட்சி விரைவு இரயில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இரயிலில் உள்ள 13 பெட்டிகளில் பல்வேறு விதமான அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பான காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிவியல் கண்காட்சி இரயில் தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர், கரூர், கொடைக்கானல் சாலை, விருதுநகர் ஆகிய நான்கு இடங்களில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், மக்கள் பார்வைக்காக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்த அறிவியல் கண்காட்சி விரைவு இரயில் நேற்று காலையில் ஆறுமுகநேரிக்கு வந்தது.

இந்த இரயிலுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த இரயில், ஆறுமுகநேரி இரயில் நிலையத்தில் மூன்றாவது நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிடுவதற்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்வேறு பள்ளிக் கூடங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் ஏராளமான வேன்கள், பேருந்துகளில் வந்தனர். அவர்கள் ஆறுமுகநேரி இரயில் நிலையத்தில் இருந்து பிரதான சந்தை வரையிலும் சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து வரிசையாக நின்றனர்.

காலை 10.15 மணியளவில் அறிவியல் கண்காட்சி இரயிலில் தொடக்க விழா நடந்தது. தூத்துக்குடி உதவி ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா, சாகுபுரம் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை நிர்வாக உதவித் தலைவர் ஜெயகுமார், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

இந்த இரயிலில் உள்ள 13 பெட்டிகளில் வானிலை மாற்றத்துக்கான புரிந்துணர்வு, அதனை சீர்படுத்துதல், உலகளாவிய வானிலை மாற்றத்துக்கான புரிதல், உயிர்வள ஆதாரம், இயற்கை பாதுகாப்பிற்கான உயிர் தொழில்நுட்பம், வானிலையை சீர்படுத்துவதற்கான இந்தியாவின் பங்களிப்பு, அறிவியல் தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்புகள், அறிவியலில் ஒளிந்திருக்கும் அதிசயங்கள், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துதல், குழந்தைகள் பகுதி என பல்வேறு வகையான அறிவியல் தொடர்பான காட்சிகளும் இடம் பெற்று இருந்தன.

ஒவ்வொரு இரயில் பெட்டிகளிலும் உள்ள அறிவியல் தொடர்பான படங்கள், காட்சிகளையும் வல்லுனர் குழுவினர் தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கிக் கூறினர். மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் அளித்தனர்.

அனைத்து இரயில் பெட்டிகளும் குளிரூட்டப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இதனால் மாணவ, மாணவிகள் ஒவ்வொரு இரயில் பெட்டியிலும் உள்ள அறிவியல் தொடர்பான கண்காட்சி படங்களையும் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

இரயில் நிலைய நுழைவு வாயிலில் மாணவர்களின் பெயர் விவரம் பதிவு செய்யப்பட்டது. இரயிலின் முதல் பெட்டியில் ஏறி, கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் கடைசி பெட்டியில் இறங்கி செல்லும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது.

நேற்று ஒரே நாளில் சுமார் 18 ஆயிரம் மாணவ, மாணவிகள் அறிவியல் கண்காட்சி இரயிலை பார்வையிட்டனர். இரயில் நிலைய நடைமேடையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மாணவ, மாணவிகளுக்கு குடிநீர், குளிர்பானம் போன்றவற்றை தன்னார்வலர்கள் வழங்கினர். மாலையில் மக்களும் அறிவியல் கண்காட்சி இரயிலை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios