15 அடி பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேன் டிரைவர் பரிதாபமாக இறந்தார். 5 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

ஊட்டியில் லவுடல் பகுதியில் இன்று காலை பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று புறப்பட்டது. வேனை டிரைவர் சந்தோஷ் என்பவர் ஓட்டி சென்றார். 7 மாணவர்கள் அதில் இருந்தனர். மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கெலடா என்ற இடத்தில் எதிரே ஒரு வாகனம் வேகமாக வந்தது.

இதனால், எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக டிரைவர், சிறிது ஒதுங்கி சென்றார். அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், நிலை தடுமாறி, திடீரென 15அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேன் ஓட்டுனர் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 5 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். 2 சிறுவர்கள் காயமின்றி தப்பினர்.

தகவலறிந்து நீலகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகயமடைந்த 5 சிறுவர்களை சிசிக்சைக்காகவும், இறந்த டிரைவர் சந்தோஷின் சடலம் பிரேத பரிசோதனைக்காகவும் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு 3 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2 குழந்தைகள் ஆபத்தான நிலையில் உள்ளதால், அவர்களை கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.