பேருந்து வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கு சென்று வர, ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் கார் வாங்கிக் கொடுத்து அப்பகுதி மக்களை நெகிழ செய்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பள்ளிக்குளத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேல் கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள். இந்த கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பள்ளி சென்றுவர பேருந்து வசதி இல்லை. பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.  ஆகையால் மாணவர்கள் தினமும் பள்ளிக்கு நடந்தே சென்று வருகின்றனர். 

இந்நிலையில் அந்தப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் ஆசிரியர் பன்னீர், மாணவர்கள் பேருந்து வசதியில்லாமல் நடந்தே சென்று வருதை அறிந்து வேதனை அடைந்தார். இதனால் மாணவர்களுக்கு தன்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என்று கருதிய அவர்,  மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர உதவியாக தனது சொந்த செலவில் ஒரு ஆம்னி காரை வாங்கிக் கொடுத்துள்ளார். 

அத்தோடு,  அந்தப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவர் ஆம்னி காருக்கு ஓராண்டுக்கு தேவைப்படும் பெட்ரோல் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியத்தை வழங்க முன் வந்துள்ளார்.