திருநெல்வேலி

திருநெல்வேலியில், இயற்கையை பாதுகாக்க 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 991 மாணவ, மாணவிகள் கின்னஸ் சாதனைக்காக ஒரே இடத்தில் ஒன்றுகூடி ஓவியத்திற்கு வர்ணம் தீட்டினர்.

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி பரதாலயா கல்சுரல் அகாடமி சார்பில் உலக கின்னஸ் சாதனை நிகழ்த்த 1 இலட்சம் சதுர அடி பரப்பில் 1000 மாணவ, மாணவிகள் பங்கேற்று வர்ணம் தீட்டும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 

தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சென்னை பைன் ஆர்ட்ஸ் அரசு கல்லூரி முதல்வர் சந்திர சேகரன் தலைமை வகித்தார். 

கோவை ஆர்ட் பவுண்டேசன் தலைவர் ரவி ராஜ் முன்னிலை வகித்தார். செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் புதிய பாஸ்கர், செயிண்ட் ஜோசப் கல்லூரி போஸ்கோ குணசீலன் உட்பட பலர் வாழ்த்திப் பேசினர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாமக்கல், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 991 மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்று "இயற்கையை பாதுகாப்போம்" என்ற தலைப்பில் ஓவியத்திற்கு வர்ணம் தீட்டினர். 

திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி, அந்த நிறுவன ஓவிய ஆசிரியை ஜெயபார்வதி, கராத்தே மாஸ்டர் சண்முக சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை பரதாலயா கல்சுரல் அகாடமி நிர்வாக இயக்குநர் செல்வ விநாயகம், இயக்குநர் கல்பனா, பயிற்சியாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.