பள்ளி மாணவர்கள் இருவர் மது அருந்திவிட்டு விட்டு போதையில் ரோட்டில் மயங்கி கிடந்தனர். அவர்களை ஆசிரியர்களே மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.இப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் இரண்டு பேர் நேற்று பள்ளியில் இருந்து வெளியேறி அப்பகுதியில் இருந்த டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது. 

மது போதையுடன் மீண்டும் பள்ளிக்கு செல்ல முயன்ற இவர்கள் அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகில் போதையில் விழுந்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் போதையில் விழுந்து கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் பள்ளிக்கு தகவலளித்தனர். இதையடுத்து அங்கு வந்த ஆசிரியர்கள் சிலர் மாணவர்களை மீட்டு அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் பிரச்சாரங்களும்நடந்து வரும் வேளையில் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி, போதை மயக்கத்தில் ரோட்டிலேயே மயங்கி விழுந்ததை கண்ட பொதுமக்கள் வேதனையடைந்தனர்.