Asianet News TamilAsianet News Tamil

கல்லால் தாக்கிய மாணவர்கள்..? சாலை மறியல் ஈடுப்பட்ட நடத்துனர், ஓட்டுனர் சென்னையில் பரபரப்பு

சென்னை ஓட்டேரியில் ஆபத்தான முறையில் பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி பயணித்த பள்ளி மாணவர்களை கண்டித்த பேருந்து நடத்துனர், ஓட்டுனர் மீது கல்லால் அடித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

school student attack bus driver
Author
Chennai, First Published Dec 18, 2021, 9:51 PM IST

சென்னை அண்ணா சதுக்கம் முதல் பெரம்பூர் வரை செல்லக்கூடிய 29 A எண் கொண்ட பேருந்தானது ஓட்டேரி நோக்கி இன்று மாலை 4 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தில் புரசைவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் ஏறியுள்ளனர். மேலும் அந்த மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிய படி, தாளம் போட்டு ஆபத்தான முறையில் ஈடுப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஆபத்தான முறையில் படிகட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை உள்ளே வரும் படி அப்பேருந்தின் நடத்துனரான கார்த்திக் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால் மாணவர்கள், நடத்துனர் சொன்னதை கேட்காமல் தொடர்ந்து பேருந்தில் அவ்வாறே பயணம் செய்து தாளம் போட்டு வந்ததாகவும் கூறுகின்றனர். இதனிடையே தொடர்ந்து உள்ளே வராமல் படியிலே நின்றுக்கொண்டிருந்ததால் கீழே இறங்கும் படி மாணவர்களை நடத்துனர் மற்றும் பேருந்தில் பயணம் செய்தவர்கள் சிலர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பேருந்தில் பயணம் செய்த பெண்களை தரக்குறைவாக பேசியதோடு,நடத்துனரை தாக்கியதாக சொல்லபடுகிறது. இதனால் உடனே பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய ஓட்டுனர் சுப்பிரமணியையும் மாணவர்கள் கல்லால் தாக்கி விட்டு தப்பியோடியுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் காயமடைந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர், தங்களை தாக்கிய பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஓட்டேரி ஸ்டாரன்ஸ் சாலை பகுதியில்  அமர்ந்து  மறியலில் ஈடுபட்டனர். இதனை கண்ட மற்ற பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பேருந்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சாலையில் நின்றதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து,போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios