தமிழ்நாடு முழுவதும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை நாளை முதல் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிகல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் மீண்டும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களை படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி 1 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை என அனைத்து மாணவர்களுக்கும் பிப்ரவரி 1 ஆம் தேதி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்பட தடை தொடர்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முந்தினம் பள்ளிகல்வித்துறை சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா குறித்த அச்சம் இன்னும் இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது. அவர்களுக்கு பள்ளி வகுப்புகள் நேரடி அல்லது ஆன்லைன் முறையில் நடத்தப்படும். எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம். நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே தமிழ்நாடு முழுவதும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை நாளை முதல் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிகல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள், பெற்றோர்கள் விரும்பினால் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம். ஆனால் நேரடி வகுப்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. சுழற்சி வகுப்புகள் இல்லாமல் தினமும் வழக்கம் பள்ளிகள் செயல்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து தகுதிவாய்ந்த ஆசிரியர்களும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும், 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் கொரொனா வழிமுறைகளை கடைப்பிடித்து கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட கொரனோ அறிகுறிகள் தென்படும் மாணவர்களை உடனே தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கபட்டுள்ளது. நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
