தமிழகம் முழுவதும் நிகழ்வாண்டில் 26,76,675 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளதாக தமிழக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தவில்லை. இந்நிலையில் 2021-22 ஆம் கல்வியாண்டில் 10,11 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளது.
பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு:
கடந்த மார்ச் 2 ஆம் தேதி பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன் படி, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி மே 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதியும், 10ம் வகுப்பு மே 6ல் தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு மே 9ம் தேதி தொடங்கி 31ம் தேதியும் நடைபெறுகிறது.
தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை:
மேலும் ஜூன் 23ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 17 ஆம் தேதி 10 வக்கு பொதுதேர்வு முடிவுகளும் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை தற்போது தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.அதில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4,86,887 பேர், மாணவிகள் 4,68,586 பேர் என மொத்தம் 9,55,474 பேர் எழுதுகின்றனர். 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4,33, 684 பேர், மாணவிகள் 4,50,198 பேர் என மொத்தம் 8,83,884 பேர் எழுதுகின்றனர். அதே போல் , 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3,98,321 பேர், மாணவிகள் 4,38,996 பேர் என மொத்தம் 8,37,317 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளையும் சேர்த்து மாணவர்கள் 13,18, 892 பேர் , மாணவிகள் 13,57, 780 பேர் என மொத்தம் 26,76, 675 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். முன்னதாக, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொது தேர்வு முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், தேர்வுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
பள்ளிக்கல்வித்துறை முக்கிய ஆலோசனை:
இதனிடையே தற்போது 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முந்தினம் திங்கள்கிழமை நடைபெறவிருந்த கணிதத்தேர்வு வினாத்தாள் சமூக வலைதளங்களில் கசிந்தது. ஏற்கனவே, முதலாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் இதேபோன்று சமூக வலைத்தளங்களில் கசிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சூழலில், திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் பொதுத்தேர்வில் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது என்று பள்ளிக்கல்வித்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் தெரிவித்தார்.
