மாணவர்களுக்கு மிக விரைவில் படிப்படியாக லேப்டாப் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில்  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று கலைவாணர் அரங்கத்தில் துவங்கியது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இதையடுத்து இன்று 2-வது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக கேள்வி - பதில் நேரம் நேரலையக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கேள்வி – பதில் நேரம், வேதா இல்லம், அம்மா மினி கிளினிக் மூடல் அறிவிப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து கார சார விவாதங்கள் நடைபெற்றது. 

இந்நிலையில் கேள்வி நேரத்தின் போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், "அதிமுக ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அந்த திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில் உள்ளது என கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியில் இதுவரை 222 வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டியவர் தமிழக முதலமைச்சர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 2018 -19 ஆம் ஆண்டு ஒன்றரை லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காமல் நிலுவையில் உள்ளது. தற்போதைய நிதி நிலைமைக்கு ஏற்ப மாணவர்களுக்கு மிக விரைவில் படிப்படியாக லேப்டாப் வழங்கப்படும்", என்றார். 

இதையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் திருமண உதவி வழங்கப்பட்டு வருகிறதா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் திருமண உதவித் திட்டத்திற்கு தமிழக அரசு 722 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதுவரை 9,000 பெண்களுக்கு திருமண உதவி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 3 லட்சத்து 13 ஆயிரம் பேருக்கு திருமண உதவி தொகை தராமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் அந்த நிதி உதவி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . இதுமட்டுமல்லாமல் கொரோனாவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் முதலமைச்சர் எளிதில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்று பேசினார்.

மேலும் இன்றைய கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் , பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் போன்ற முக்கிய அறிவிப்புகளை தெரிவித்துள்ளார்.