தர்மபுரியில் கேரள சமாஜம் சார்பில் முதன் முறையாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் விழா நடைபெற்றது.
தர்மபுரி கேரள சமாஜத்தின் சார்பில், முதன் முறையாக பள்ளிக்கு செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் விழா தர்மபுரி ஓட்டல் ராம கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கேரள சமாஜத்தின் தலைவர் ராமன்குட்டி நாயர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஸ்ரீதரன் நம்பியார், பொருளாளர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் வின்சென்ட் வரவேற்று பேசினார்.
விழாவில் கேரளாவை சேர்ந்த பகவதி சுவாமி நம்பூதிரி மற்றும் அவருடைய குழுவினர் லட்சுமி, சரஸ்வதி, பகவதி பூஜைகள் செய்து குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் சடங்குகளை நடத்தினர். பின்னர், ஒவ்வொரு குழந்தையின் நாக்கிலும் தங்க எழுத்தாணியால் ஹரி ஸ்ரீ கணபதி நமக என்று எழுதி ஆசீர்வாதம் செய்தனர். பின்னர் அரிசியில் குழந்தைகளின் கையை பிடித்து ஹரி ஸ்ரீ கணபதியே நமக என்று எழுத வைத்து ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
விழாவில் பங்கேற்ற 200–க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிறிய துண்டு, எழுது பலகை, பென்சில், பல்பம், புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அவல், மலர், நெய் அப்பம், வெல்லம், தேங்காய், நெய்பாயாசம், நேந்திரம் பழம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் சங்க நிர்வாகிகள் ஹரிக்குமார், பிரகாசம், வேணுகோபால், கிருஷ்ணன் உண்ணி, ராமகிருஷ்ணன், நாராயணகுட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் மோகன் நன்றி கூறினார்.
