தேனி

மலை உயரத்தில் இருந்து உருண்டுவந்த பாறை விழுந்ததில் தனியார் பள்ளிக்கூட பேருந்து நசுங்கியது. ஆள்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

தேனி மாவட்டம், ராஜகுமாரி என்.ஆர்.சிட்டி பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை அழைத்து வந்துவிட்டு மீண்டும் அவரவர் வீடுகளில் கொண்டு சென்று விட பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் மாலையில் பொன்முடி அணைக்கட்டு டாப்ரோடு பகுதியில் தினமும் நிறுத்தி வைக்கப்படும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மாணவ, மாணவிகளை அவரவர் வீடுகளில் இறக்கிவிட்ட பின்பு வழக்கம் போல் டாப்ரோடு பகுதியில் பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது அருகே உள்ள மலைப்பகுதியின் உயரத்தில் இருந்து உருண்டுவந்த பாறை பேருந்து மீது விழுந்தது.

இதில் பேருந்தின் முன்பகுதி நசுங்கியது. பாறை விழுந்த சமயத்தில் அப்பகுதியில் ஆள்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த ராகுமாரி காவலாளர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்துச் சென்று பார்வையிட்டு பின்னர் பேருந்தையும், சாலையில் கிடந்த பாறையையும் அகற்றினர்.