தொடர் கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில்  தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

இந்திய பெருங்கடல் பகுதியில் கன்னியாகுமரிக்கு தெற்கே, மாலத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று உள்ளது. இது தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியை நோக்கி நகரும் என்றும் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த தாழ்வு மண்டலத்தால்  சென்னை உட்பட வட தமிழகத்தில் 15 மற்றும் 16ம் தேதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது

தொடர் மழையால் தண்டவாளத்தில் தண்ணீர்  தேங்கி நிற்கிறது. இதனால்  முத்துநகர் ரயில், தூத்துக்குடி மாவட்டம் மேலூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தொடர் கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில்  தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.