கர்ப்பிணிகளுக்கு ‘ஸ்கேன்‘பரிசோதனை செய்யும்போது கருவின் உள்ள பாலினத்தை தெரிவித்தால் 3 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் ஆட்சியர் விவேகானந்தன் எச்சரிக்கை விடுத்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் ஸ்கேன் மையங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மருத்துவமனைகளுக்கான அவசர கால பேரிடர் மேலாண்மை கூட்டம், தர்மபுரியில் உள்ள இந்திய மருத்துவ சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் விவேகானந்தன் கலந்து கொண்டு டெங்கு விழிப்புணர்வு மற்றும் உலக சுகாதார இயக்கத்தின் விழிப்புணர்வு குறுந்தகடை டாக்டர்களுக்கு வழங்கினார்.
“தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 94 ஸ்கேன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 57 ஸ்கேன் மையங்கள் தனியார் மையங்களாகவும், 37 ஸ்கேன் மையங்கள் அரசுத்துறையை சேர்ந்ததாகவும் உள்ளது. பெண் கருக்கலைப்பு மற்றும் கருவின் பாலினம் கேட்பதும், அறிவிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யும் டாக்டரோ, ஊழியர்களோ கருவின் உள்ள பாலினத்தை தெரிவித்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனையுடன் கூடிய ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
கர்ப்பிணிகள் ஸ்கேன் பரிசோதனை செய்யும் போது அங்குள்ள டாக்டரிடமோ அல்லது பணிபுரியும் ஊழியரிடமோ கருவின் பாலினம் அறிவது குற்றமாகும். மீறினால் 3 ஆண்டு சிறைத்தண்டனை கூடிய ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கப்பட உள்ள காலமாகும். இவற்றை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. டாக்டர்கள், சிறப்பு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். போதிய மருந்து மாத்திரைகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
மழைக்கால நோய்களான டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா, மஞ்சள் காமாலை, நிமோனியா மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். வெள்ளச்சேதம் மற்றும் வடகிழக்கு பருவமழையால் ஏற்படக்கூடிய அனைத்து இயற்கை பேரிடர்களையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது”.
என்று இந்த கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்தார்.
கூட்டத்தில் சுகாதார இணை இயக்குனர் ஜானகி, துணை இயக்குனர் ஜெகதீசன், அலுவலக கண்காணிப்பாளர் வெண்ணிலா, முன்னோடி வங்கி மேலாளர் முத்தரவு உள்பட மருத்துவத்துறை அதிகாரிகள், டாக்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
