கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் குற்றவாளியான சயானின் மனைவி மற்றும் மகள் கொலை செய்யப்படவில்லை என பிரேத பரிசோதனைக்கு பின்னர் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் ஒன்று நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் காவலாளியாக வேலை பார்த்த ஓம்பகதூர் என்பவர் கடந்த 23 ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

அப்போது கிஷன் பகதூர் என்ற காவலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் நேற்று விபத்தில் உயிரிழந்தார்.

அதேபோல் மற்றொரு குற்றவாளியான சயான் காரில் சென்று கொண்டிருந்தபோது டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சயான் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காரில் அவருடன் வந்த அவரது மனைவி, மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில் அவர்கள் உடலில் வெட்டுக்காயம் இருந்ததால் போலீசார் சந்தேகத்தின் பேரில் திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது பிரேத பரிசோதனை முடிவுற்ற நிலையில், சயானின் மனைவி மற்றும் மகள் கொலை செய்யப்படவில்லை என பிரேத பரிசோதனைக்கு பின்னர் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.