Save us match Box manufacturers blockade office blockade ...
தூத்துக்குடி
சட்டவிரோத செயலில் ஈடுபடுகிறவர்களிடம் இருந்து தீப்பெட்டி தொழிலையும், தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று உதவி ஆட்சியர் அலுவலகத்தை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம், செயலாளர் சேதுரத்தினம், பொருளாளர் தங்கமணி, தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் ஆர்.எஸ்.சுரேஷ், செயலாளர் கதிரவன் உள்ளிட்ட தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நேற்று காலையில் கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள், உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்லப்பாண்டியனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில், "கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் பல தலைமுறைகளாக தீப்பெட்டி தொழில் நடைபெற்று வருகிறது. இதில் 70 சதவீதம் பேர் பகுதி எந்திரம் மூலம் தயாராகும் தீக்குச்சிகளை, கையினால் பெட்டியில் அடைத்து உற்பத்தி செய்கின்றனர். இதில் 90 சதவீதம் பேர் பெண்கள்.
இந்த நிலையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களுக்கு 20 சதவீத சம்பள உயர்வு அறிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு தீப்பெட்டி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
ஆனால், சிலர் தொழிலாளர்களை வற்புறுத்தி, 40 சதவீத கூலி உயர்வு கேட்க வேண்டும் என்று கூறி, போராட்டத்திற்கு தூண்டி வருகின்றனர்.
அவ்வாறு கூலி உயர்வு வழங்கினால் உற்பத்தி செலவு அதிகரிக்கும். இதனால் தீப்பெட்டியின் அடக்கவிலை, முழு எந்திரத்தில் உற்பத்தி செய்யும் தீப்பெட்டியை விட பல மடங்கு உயரும். இதனால் அதிக தொழிலாளர்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் பகுதி எந்திர தீப்பெட்டி தொழில் அழிந்து விடும்.
எனவே, பகுதி எந்திர தீப்பெட்டி தொழிலை அழிக்கும் வகையில், சில தொழிற்சங்கத்தினர் முழு எந்திர தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு பினாமியாக செயல்படுகின்றனர். அவர்கள், வேலைக்கு வரும் தொழிலார்களை மிரட்டுவது, தீப்பெட்டி தொழிற்சாலையை மூட சொல்லி மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
எனவே, இதுபோன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடுகிறவர்களிடம் இருந்து தீப்பெட்டி தொழிலையும், தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டும்" என்று அதில் கூறியுள்ளனர்.
