செம்மரக் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த விமான பணிப் பெண் சங்கீதா சாட்டர்ஜீ கைது செய்யப்பட்டுள்ளார்.

செம்மரக்கடத்தலில் சர்வதேச அளவில் தொடர்புடைய லட்சுமணன், சித்தூர் போலீசாரால் கடந்த 2014 ஆம் ஆண்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடப்பா சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு வருட சிறைவாசத்திற்குப் பின் 2015 ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த அவர், மீண்டும் செம்மரங்களை கடத்தி வந்தார்.

இதையடுத்து சித்தூர் போலீசார் லட்சுமணனை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டாலும் தொழிலை கைவிட மனமில்லாத அவர் தனது மனைவியும், விமானப் பணிப் பெண்ணுமான சங்கீதா சாட்டர்ஜீ மூலம் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

சிறையில் இருந்தவாறு லட்சுமணன் திட்டங்களை தீட்டுவதும் அதனை சங்கீதா சாட்டர்ஜீ செயல்படுத்துவதுமாக இருந்தது. இவ்விவகாரம் வெளியே கசிந்ததும் கடந்த 2016 ஆம் ஆண்டு சங்கீதா சாட்டர்ஜீ கைது செய்யப்பட்டார்.

ஆனால் சினிமா பாணியில் சுமார் 30 பேர் வழக்கறிஞர்கள் குழு ஒரு மணி நேரத்திலேயே சங்கீதாவை ஜாமீனில் வெளியே எடுத்தனர். விசாரணைக்கு ஆஜராகாததால் சங்கீதாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சங்கீதாவின் வங்கிக் கணக்கை முடக்கிய ஆந்திர அரசு, 10 லட்சம் ரூபாய், 2.5 கிலோ தங்கம், 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் என 60 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்களை பறிமுதல் செய்தது.இதற்கிடையே ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு தலைமறைவாக இருந்த சங்கீதாவை போலீசார் கைது செய்துள்ளனர்.