தூத்துகுடி

தூத்துக்குடியில், கருமேனி ஆற்றின் கரையில் சாலையின் நடுவில் பள்ளம் தோண்டி மர்மநபர்கள் மணலை திருடிச் சென்றதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கொம்பன்குளம் பஞ்சாயத்து இரட்டைகிணறு கிராமத்தில் இருந்து நன்னிகுளம், பட்டன்சேரி, அழகப்பபுரம் வழியாக இட்டமொழி செல்லும் சாலை பல வருடங்களாக குண்டும் - குழியுமாக உள்ளது. 

இந்த நிலையில் இரட்டைகிணறு அருகில் கருமேனி ஆற்றின் கரையோரம் உள்ள சாலையில் இரவில் மர்மநபர்கள் ஆற்று மணலை திருடிச் செல்கின்றனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த சாலையின் மையப்பகுதி வரையிலும் மர்மநபர்கள் பெரிய பள்ளம் தோண்டி, ஆற்று மணலை திருடிச் சென்றதால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்த வழியாக இயக்கப்பட்ட மினி பஸ்சும் நிறுத்தப்பட்டது. சிலர் இருசக்கர வாகனங்களில் சாலையோரமாக மண் தரையில் கடந்து செல்கின்றனர். பெரும்பாலானவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் மாற்றுப்பாதையில் சுற்றி செல்கின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள், சாலையின் நடுவில் உள்ள பெரிய பள்ளத்தை அறியாமல், அதில் விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே, "சாலையின் நடுவில் பள்ளம் தோண்டி, ஆற்று மணலை திருடியவர்களை கைது செய்ய வேண்டும். 

இரட்டைகிணறு - இட்டமொழி இடையே புதிய தார் சாலை அமைக்க வேண்டும்"என்று அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.