திருச்சியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு லாரிகளின் தர்மபுரி, பாலக்கோடு வழியாக மணல் கடத்தப்படுவதாக ஆட்சியர் விவேகானந்தனுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் பாலக்கோடு தாசில்தார் அதியமான், துணை தாசில்தார் சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் பாலக்கோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
காடுசெட்டிப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த 7 லாரிகளை நிறுத்தி தாசில்தார் மற்றும் அலுவலர்கள் ஆவணங்களை சோதனை செய்தனர்.
லாரிகளில் திருச்சியில் இருந்து அனுமதி பெறாமல் கர்நாடகா மாநிலத்திற்கு மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 7 லாரிகளையும் தாசில்தார் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து சென்றார்.
மேலும் இதுதொடர்பாக லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர்களுக்கு அபராதம் விதிக்க தர்மபுரி உதவி ஆட்சியர் ராமமூர்த்திக்கு தாசில்தார் அதியமான் பரிந்துரை செய்துள்ளார்.
