Asianet News TamilAsianet News Tamil

கள்ளப்பட்டியில் சல்லிக்கட்டு - போலீஸ் உள்பட 12 பேரை பதம்பார்த்த முரட்டுக் காளைகள்...

sallikkattu in Kallappatti - 12 people injured including policemen
sallikkattu in Kallappatti - 12 people injured including policemen
Author
First Published Feb 26, 2018, 8:04 AM IST


பெரம்பலூர்

கள்ளப்பட்டியில் நடைப்பெற்ற சல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் துணை காவல் கண்காணிப்பாளர் உள்பட 12 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ளது கள்ளப்பட்டி. இங்கு நேற்று சல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.

இந்தப் போட்டிகளை ஒட்டி அங்கு அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் அவிழ்த்துவிட கொண்டுவரப்பட்டு இருந்த 350 காளைகளில், 20 காளைகளுக்கு மருத்துவர்கள் அனுமதி மறுக்கப்பட்டதால், 330 காளைகள் சல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டன.

வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முற்பட்டனர்.  அப்போது மக்கள் அவர்களை கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

சில காளைகள் வீரர்களை பதம் பார்த்தன. இதில் மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியின்போது காளைகள் முட்டியதில் கடம்பூரைச் சேர்ந்த சுரேஷ் (27), தொண்டமாந்துறை ராமர் (63), அரசலூர் அசோக் (21), பூலாம்பாடியை சேர்ந்த பாஸ்கர் (21), மணி (19), சேலம் மாவட்டம் கொண்டையம்மல்லியை சேர்ந்த அழகுவேல் (28) உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வாடிவாசலுக்கு காளைகளை கொண்டுவரும் வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகத்தை ஒரு காளை திடீரென்று முட்டித் தள்ளியது. இதில் ஆறுமுகத்துக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக் குழுவினரால் வெள்ளி பாத்திரம், வேட்டி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், சல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட அனைத்து காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த்ப போட்டிகளை காண மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம், சேலம், அரியலூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை, அரும்பாவூர், செயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான மக்கள் வண்டி கட்டிக்கொண்டு வந்திருந்தனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios