sallikattu Cows sold for Rs.6 crore in thiruchi - Pongal effect ...

திருச்சி

பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி சல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆயத்தப்படும் வகையில் வாரந்தோறும் நடைபெறும் மணப்பாறை மாட்டுச் சந்தையில் ரூ.6 கோடிக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் கடும் வறட்சி காரணமாக விவசாயம் பொய்த்துவிட்டது. இந்த நிலையில் கால்நடைகளுக்கு தீவனம் கொடுக்க முடியாமல் விவசாயிகள் பலர் மாடுகளை விற்றனர். மாடுகளை உடனே வாங்க ஆட்கள் கிடைக்காமல் கிடைத்த விலைக்கு மாடுகளை விற்றனர்.

ஆனால், சமீபத்தில் அடிக்கடி பெய்துவரும் மழையினால் பல்வேறு இடங்களில் புல், செடி, கொடிகள் வளர்ந்து பசுமையாக காணப்படுகிறது. மேலும், விவசாயிகள் பலரும் தங்களின் விளை நிலங்களில் சோளம், கம்பு உள்ளிட்டவற்றை பயிர் செய்து அவையும் வளர்ச்சி கண்டுள்ளது. இதனால், மாடுகளுக்கு எளிதில் தீவனம் கிடைப்பதால் மீண்டும் மாடுகளை வாங்கி வளர்க்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

மணப்பாறையில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெறும். இது மிகவும் புகழ் பெற்றது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், வணிகர்கள் வந்து தங்களுக்குத் தேவையான மாடுகளை வாங்கிச் செல்வர்.

இதனால் மணப்பாறை மாட்டுச்சந்தையில் பசு மாடு, ஜெர்சி மாடு, நாட்டு மாட்டினங்கள், சல்லிக்கட்டு காளைகள், எருமைகள், வண்டி மாடு, உழவு மாடு என மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

சில மாதங்களுக்கு முன்பு அடிமாட்டு விலையில் விற்பனையான மாடுகள் தற்போது அதிக விலைக்கு விற்பனையாகின்றன. விவசாயிகள் பலரும் மாடுகளை வாங்க நேற்று சந்தையில் குவிந்தனர். மேலும், பொங்கல் பண்டிகையும் நெருங்கிவிட்டதால் வழிபாட்டிற்காகவும், கறவைக்காகவும், உழவுக்காகவும் பலர் மாடுகளை வாங்க திரண்டனர். இதனால் வழக்கமாக ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனையாகும் மாடுகள் நேற்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது.

இந்த ஆண்டும் சல்லிக்கட்டு நடத்த எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளதால் சல்லிக்கட்டு காளைகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் சல்லிக்கட்டு காளைகளின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. சாதாரண சல்லிக்கட்டு இரக கன்றுக்குட்டி ரூ.50 ஆயிரம் வரை விலைபோனது.

சந்தையில் இந்த வாரம் கறவை மாடுகள் மற்றும் உழவு மாடுகள் அதிகளவில் விற்பனை நடைப்பெற்றது. விலை அதிகரித்து காணப்பட்டாலும் அவற்றை வாங்க விவசாயிகள் பலரும் முனைப்பாய் இருந்தனர்.

இந்த வாரமே விலை அதிகளவில் உள்ளதால் இனிவரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மாடுகளின் விலை உச்சத்தைத் தொட்டு விடும் என்று வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று மதியம் வரை நடந்த இந்த மாட்டுச்சந்தையில் சுமார் ரூ.6 கோடி வரை மாடுகள் விற்பனையானது.