விடிய விடிய பெய்த வரலாறு காணாத மழையால் சேலம் மாநகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. ராசிபுரம் அருகே  திருமணிமுத்தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏரிகள், குளங்கள்  வேகமாக நிரம்பி வருகின்றன.

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை மற்றும் வெப்பச் சலனம்  காரணமாக பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை, திண்டுக்கல்,விழுப்புரம்,தஞ்சாவூர். விருதுநகர் மாவட்டங்களில் நேற்று மாலை கன மழை கொட்டித் தீர்த்தது

இந்நிலையில் நேற்று இரவு சேலம் மாவட்டத்தில் விடியவிடிய கன மழை வெளுத்து வாங்கியது. சேலம்  டவுன், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் மழை பெய்தது. சேலத்தின் பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

கனமழையால் சேலம் மாவட்டத்தில்  உள்ள குளங்கள்,ஏரிகள் ஆகியவை  வேகமாக நிரம்பி வருகின்றன.

சேலத்தில் 13.38செ.மீ அளவும், ஏற்காட்டில் 11.68செ.மீ அளவும் மழை பதிவாகி உள்ளது.மேலும் சேலம் மாவட்டத்தில் சராசரி மழை அளவாக 2.4 செ.மீ அளவுமழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மொத்தத்தில்  36.28 செ.மீ மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதே போல் நாமக்கல் மாவட்டத்திலும் மழை பெய்ததை தொடர்ந்து ராசிபுரம் மதியம்பட்டி திருமணிமுத்தாறு தரைப்பாலத்தில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

இதே போல் மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், கோவில்பட்டி, விருதுநகர், தஞ்சாவூரின் பல பகுதிகளில் கனமழை பெய்தது.