சேலம் அருகே  நேற்றிரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில்  திரைப்படத்துக்கு சென்று திரும்பிய சிறுவன்  ஒருவன் அடித்துச் செல்லப்பட்டார்.

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை மற்றும் வெப்பச் சலனம்  காரணமாக பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை, திண்டுக்கல்,விழுப்புரம்,தஞ்சாவூர். விருதுநகர் மாவட்டங்களில் நேற்று மாலை கன மழை கொட்டித் தீர்த்தது

இந்நிலையில் நேற்று இரவு சேலம் மாவட்டத்தில் விடியவிடிய கன மழை வெளுத்து வாங்கியது. சேலம்  டவுன், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் மழை பெய்தது. சேலத்தின் பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

சேலத்தில் நேற்று இரவு தொடர்ச்சியாக 3 மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக நாராயணநகர் , பச்சைப் பட்டி ,கிச்சிப்பாளையம் பகுதியில் மழை நீர் ரோட்டில் வெள்ளம் போல் ஓடியது.

இந்நிலையில், மழையின் போது நாராயணநகர் பகுதியில்  4 சிறுவர்கள் திரைப்படம் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில்   அவர்களில் ஒரு சிறுவன் சாலையைக் கடந்த போது  வெள்ளம் இழுத்து சென்றது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை தேடி வருகின்றனர்.