வேலூர்

தனியார் ஷூ தொழிற்சாலையிடம் இருந்து 4 மாத சம்பளம், இரண்டு மாத போனஸ் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க கோரி அங்கு பணிபுரியும் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் ராமன் தலைமை வகித்தார். 

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். அந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

குறைதீர்வு நாள் கூட்டத்தில், கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 398 மனுக்கள் பெறப்பட்டன.

அதன்படி, பள்ளிக்கொண்டாவில் இயங்கி வரும் தனியார் ஷூ தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். 

அதில், "பள்ளிக்கொண்டாவில் இயங்கி வரும் தனியார் ஷூ தொழிற்சாலையில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். 

எங்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பாளம் வழங்கப்படவில்லை. அதேபோல கடந்தாண்டு கிறிஸ்துமஸ் போனஸ் மற்றும் இந்தாண்டு பொங்கல் போனஸ் ஆகியவையும் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் கேட்டதற்கு, சில நாட்களில் நான்கு மாத ஊதியம் மற்றும் போனஸ் தருவதாக கூறினார்கள். ஆனால், இதுவரை தரவில்லை. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களின் சம்பளத்தில் பிடித்த பணப்பலன்களை வரவில் வைக்கவில்லை. நான்கு மாதங்களாக ஊதியம் வழங்காததால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளோம். 

எனவே, தொழிற்சாலை நிர்வாகம் நிலுவையில் உள்ள நான்கு மாத சம்பளம், இரண்டு மாத போனஸ் ஆகியவற்றை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர்.

அதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணலாம் என்று தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கஜேந்திரன், சமூக பாதுகாப்புத்துறை துணை ஆட்சியர் பேபிஇந்திரா உள்பட பலர் பங்கேற்றனர்.