தமிழக ரயில்வே காவல் துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு   தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான பாக் ஜலசந்திப் பகுதியை நீந்திக் கடந்தார். அவருடன் 10 காவல் துறையினரும் நீரிணைப் பகுதியை நீந்திக் கடந்தனர்.

தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் கடற்பகுதி பாக் ஜலசந்தி எனப்படுகிறது. ராமேசுவரம் தீவும் அதன் அருகில் உள்ள மணல் தீட்டுக்கள் மற்றும் ஆதாம் பாலமும் பாக் ஜலசந்தியை மன்னார் வளைகுடாவிலிருந்தும் பிரிக்கிறது.

தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான இந்த  பாக் ஜலசந்திப் பகுதி 32 கி.மீட்டர் தூரம் கொண்டதாகும்.  உலகில் உள்ள முக்கியக் கடல் கால்வாய்களில் நடைபெறுவது போல் பாக் ஜலசந்திப் பகுதியிலும் நீச்சல் சாதனைகள் செய்வது வழக்கமாகி  வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாக் ஜலசந்தியில்  3 நீச்சல் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. கடந்த 24-ம் தேதி சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜேஷ்வரபிரபுவும், 25-ம் தேதி ஆந்திர மாநில தலைமை காவலர் துளசி சைதன்யாவும் பாக் ஜலசந்தி கடல் பகுதியினை  நீந்தி சாதனை புரிந்தனர்.

இந்நிலையில்  தமிழக ரயில்வே காவல் துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறையைச் சேர்ந்த 10 பேர் தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான பாக்ஜலசந்தி  கடற்பகுதில் 28.5 கி.மீ தூரத்தினை 12.14 மணி நேரத்தில் நீந்திக் கடந்தனர்.

நேற்று அதிகாலை 1.30 மணிக்குத் தலைமன்னார் அருகே உள்ள ஊர்மலை என்ற பகுதியிலிருந்து நீந்தத் தொடங்கிய, இவர்கள் பகல் 1.44 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியை வந்தடைந்தனர்.

56 வயதில் பாக்நீரிணை கடல் பரப்பை நீந்திக் கடந்த சைலேந்திரபாபு மற்றும் அவருடன் நீந்திய நீச்சல் வீரர்களையும் மாவட்ட ஆட்சியர் நடராஜன், கடற்படை கமாண்டர் தினேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, டி.எஸ்.பி மகேஷ் உள்ளிட்டோர் பாராட்டி வரவேற்றனர்.

சைலேந்திர பாபு கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னையில் கனமழை  காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டபோது  மூழ்கிய பல இடங்களில் நீச்சல் அடித்து பலரது உயிரை காப்பாற்றியுள்ளார்