நிலாவில் பாபா முகம் தெரிவதாக வந்த செய்தியால் சென்னை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு வானில் நிலவை பொதுமக்கள் ஆர்வத்துடன் உற்று நோக்கினர். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய் பாபாவை விட சீரடி சாயி பாபாவுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் சாய்பாவின் பக்தர்கள் அதிகம் இருந்து வருகின்றனர். 

இந்நிலையில் நிலாவில் பாபா முகம் தெரிவதாக செய்தி வெளியானது. ஆனால், இந்த சாய்பாபா முகம் தோன்றிய நிலவு ஒரு சிலருக்கு தெரிந்ததாகவும், பலருக்கு தெரியவில்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது. இது சம்பந்தமான தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகியது. பாபாவின் முகம் நிலாவில் தெளிவாக படிந்திருப்பது போல் காணப்பட்டது. இதன் காரணமாக நள்ளிரவில் பெரும்பாலோர் மொட்டை மாடிகளிலும், தெருக்களிலும் கூடி நின்று நிலவை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தனர். 

அப்போது சிலர் நிலவில் பாபாவின் முகம் தெரிவதாகவும், ஒருசிலர் தெரியவில்லை என்றும் கூறி வந்தனர். தாங்கள் பாபாவின் முகத்தை நிலவில் பார்த்ததாக சிலர் கூறி மேலும் பரபரப்பை அதிகரித்தனர்.

இருப்பினும், இது வதந்தி என்று கூறிய சிலர், பாபாவின் உருவம் நிலவில் தெரிவதாக நாம் மனத்தில் நினைத்துக்கொண்டு பார்ப்பதாலேயே அது போன்ற காட்சி கண்ணுக்குப் புலப்படுவதாக கூறினர். மேலும், தங்களுக்கு பிடித்த கடவுளை மனத்தில் நினைத்துக்கொண்டு பார்த்தாலும் அவர்களின் உருவம் நிலவில் இருப்பது போல் தெரியும் என்று அவர்கள் விளக்கம் அளித்தனர்.  

நிலவில் ஒரு மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்ற வீடியோ காட்சி கடந்த 2014 ஆம் ஆண்டு இதே போல் வெளியாகி, பரபரப்பு கிளம்பியது. இது நாசா எடுத்த படம் என்றும் தகவல்கள் வெளியானது. இருப்பினும், அதுகுறித்து இன்னும் நாசா உறுதிப்படுத்தவில்லை. அந்த உருவம் என்ன, யார் அது என்பது குறித்தும் இன்னும் நாசா தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.