போராடும் இளைஞர்களுடன் சகாயம் ஐஏஎஸ் சந்திப்பு -வாழ்த்து தெரிவித்தார்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இன்று அவசர சட்டம் கொண்டுவரும் தேவையை உருவாக்கிவிட்டனர்.கட்டுப்பாடான போராட்டத்தை கண்டு உலகமே பாராட்டுகிறது.
மறுபுறம் வாழ்த்து சொல்ல வருகிறவர்களை இனங்கண்டு இளைஞர்கள் ஏற்றுகொள்கின்றனர். அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அனுமதி இல்லை என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
தங்களுடைய போராட்டத்தின் நோக்கத்தை யாரும் சிதைத்துவிடக்கூடாது, யாரும் அதை கையில் எடுத்து சொந்தம் கொண்டாடி விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். சினிமா நட்சத்திரங்களை கண்டு இவர்கள் வாயை பிளப்பதில்லை. சில நடிகர்கள் தவிர பெரும்பாலானோர் விரட்டி அடிக்கப்பட்டனர்.
ஆனாலும் சமூகத்தில் நல்ல கருத்து கொண்டு நடக்கும் பிரபலங்களை மதிக்கத்தான் செய்கின்றனர்.அந்த வகையில் மெரினாவில் ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக போராடி வரும் இளைஞர்களை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நேரில் சந்தித்துப் பேசினார். தனது வாழ்த்துகளை அவர்களுக்குத் தெரிவித்தார்.
“இளைஞர்களின் எழுச்சியை நேரில் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். மிகுந்த மகிழ்ச்சியாஅக இருந்தது. அங்கே நான் உள்ளே நுழைந்து அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கு வாழ்த்து மட்டும் தெரிவித்து விட்டு உடனே கிளம்பி விட்டேன்” என்று தெரிவித்தார் சகாயம்.
