திருத்தணி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனுக்காக, விதிகள் ஏதும் மீறப்படவில்லை என்றும் தரிசனத்துக்கு கால தாமதம் ஏற்பட்டதாக எழுந்த புகார் முற்றிலும் தவறானது என்றும் கோயில் இணை ஆணையர் கூறியுள்ளார்.

தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், திருத்தணி முருகன் கோயிலுக்கு தனது குடும்பத்துனருடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சாமி தரிசனம் செய்தார். அப்போது கிரிஜாவுக்கு கோயில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினார். 

கிரிஜா வைத்தியநாதன், சாமி தரிசனம் செய்த நேரத்தில் பக்தர்கள் யாரையும் சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறியிருந்தனர். இந் புகாரை, கோயில் நிவாகம் மறுத்துள்ளது.

இது குறித்து கோயில் இணை ஆணையர் சிவாஜி கூறுகையில், கடந்த 30 ஆம் தேதி அன்று காலை 8.40 மணிக்கு தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தரிசனத்துக்கு வருகை தந்தனர்.

சுமார், 20 நிமிடத்துக்குள் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, சென்னைக்கு கிளம்பிச் சென்றனர். தலைமைச் செயலர் தரிசனத்தின்போது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லும் தரிசன வரிசையில் எவ்வித தடையும் இல்லாமல் தரிசனம் செய்து செய்தனர். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தரிசன வசதிகளை நிறுத்தவில்லை. வழக்கம்போல் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

தலைமைச் செயலர் மிகக் குறுகிய கால அவகாசத்தில் தரிசனம் முடித்துவிட்டுச் சென்று விட்டார். அதேநேரம் தரிசனத்துக்கு வந்த பக்தர்களும், காலதாமதம் ஏற்பட்டு என புகார் எதுவும் திருக்கோயில் நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை. பக்தர்கள் பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது என இணையதளத்தில் வெளியான செய்தி முற்றிலும் தவறான செய்தியாகும் என்று கூறினார்.