நாமக்கல்

பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வரும் கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 இலட்சம் பரிசு வழங்கப்படும் என சேந்தமங்கலம் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சேந்தமங்கலம் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

அப்போது அவர் பேசியது:

“பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் விடுத்த கோரிக்கையின்படி, நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டி கொடுக்கப்படும்.  

பள்ளிக்கு தேவையான அடிப்படை தேவைகளை அனைத்தும் உடனடியாக நிறைவேற்றி கொடுக்கப்படும்,

மேலும், பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வரும் கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 இலட்சம் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.  பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.