நீலகிரி
 
முதுமலை புலிகள் காப்பக காட்டுப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்தவர்களுக்கு ரூ.1-ஐ அபராதமாக விதித்து வனத்துறையினர் கடும் தண்டனை  கொடுத்துள்ளனர்.

முதுமலையைச் சுற்றி பார்க்கவும், தனியார் நிறுவனத்திற்கு விளம்பர படம் எடுக்கவும் கோயம்புத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது நண்பர்கள் ஒன்பது பேருடன் ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் நீலகிரி மாவட்டம், மசினகுடிக்கு வந்துள்ளார். 

இங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கிய அவர்கள் நேற்று முன்தினம் காலை முதலே முதுமலை புலிகள் காப்பகத்தை இரகசியமாக ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்து வந்துள்ளனர். 

புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாயார் பகுதிக்கு நேற்று மாலை சென்ற அவர்கள் வனப்பகுதியையும், மாயார் அணை மற்றும் நீர் மின் நிலையத்தையும் வீடியோ எடுத்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த மசினகுடி வனச்சரகர் மாரியப்பன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் அவர்களை மடக்கிப் பிடித்தனர். அதன்பின்னர் அவர்கள் பத்து பேரையும் மசினகுடி வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை விசாரித்தனர். 

அதன்பின்னர் காட்டுப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்த அவர்களுக்கு ரூ.2 இலட்சம் வரை அபராதமாக விதிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

அபராத தொகையை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோயம்புத்தூரைச் சேர்ந்த சில காவல்துறை உயரதிகாரிகளிடம் செல்போனில் பேசினர். அதனையடுத்து அந்த அதிகாரிகள் சம்பந்தபட்ட 10 பேரையும் விட்டுவிடும்படி சிபாரிசு செய்தனர். இதனால் மசினகுடி வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

காட்டுப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்தவர்களுக்கு அபராதம் விதித்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்த வனத்துறையினர் சந்தோஷுக்கு ரூ.1 அபராதம் விதித்து வசூலித்தனர். 

அத்துடன் ஆளில்லா குட்டி விமானத்தை இயக்கிய கோவையை சேர்ந்த அகமது மற்றும் அவரது நண்பருக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் 1 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.