கரூர் வட்டம் உப்பிடமங்கலம் கிழக்குப் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களுக்கு ரூ.90 இலட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.
கரூர் வட்டம் உப்பிடமங்கலம் கிழக்குப் பகுதியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடைப்பெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
முதலில், பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.
பின்னர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, வேளாண் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், தோட்டக்கலைத் துறை, சுகாதாரத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் சிறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து அலுவலர்களால் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 45 பேருக்கு பட்டா நகல் (நத்தம்), 22 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, 31 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 14 பேருக்கு விதவை உதவித்தொகை, ஒருவருக்கு திருமண உதவித்தொகை, 4 பேருக்கு தற்கால இயலாமைக்கான உதவித்தொகை, 9 பேருக்கு பட்டா மாற்றம், 20 பேருக்கு புதிய குடும்ப அட்டை, 27 பேருக்கு சிறு, குறு விவசாயி சான்று, 6 பேருக்கு வாரிசுச் சான்று என மொத்தம் ரூ.90 இலட்சத்தில் அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கீதா, கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் (பொ) சைபுதீன், வேளாண் இணை இயக்குநர் அல்தாப், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் நளினி, வட்டாட்சியர் துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
