Rs 88 thousand fine for those responsible for producing dengue mosquito breeds
விழுப்புரம்
விழுப்புரத்தில் மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்தவர்களுக்கு ரூ.88 ஆயிரம் விதித்து அதிரடி காட்டினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாவட்டத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருப்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறது மாவட்ட நிர்வாகம்.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் மல்லிகா, நகராட்சி ஆணையாளர் இலட்சுமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமார் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேற்று காலை கள்ளக்குறிச்சி நகரில் உள்ள தனியார் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சேலம் சாலையில் உள்ள ஒரு டைல்ஸ் விற்பனை நிலையத்திற்குச் சொந்தமான கிடங்கில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அங்கு திறந்த வெளியில் கிடந்த பீங்கான் உள்ளிட்ட பொருட்களில் தேங்கி நின்ற நீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அதிகாரிகள் டைல்ஸ் விற்பனை நிலைய உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதேபோன்று, அதே சாலையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த சிமெண்டு பைப் தயாரிப்பு நிறுவன உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம், டயர் விற்பனை கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம், மரக்கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம், புதிதாக வீடுகள் கட்டிவரும் மூன்று பேருக்கு தலா ரூ.10 ஆயிரம், செருப்பு விற்பனை கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம், பீடா கடைக்காரருக்கு ரூ.500, வீட்டின் உரிமையாளர் ஒருவருக்கு ரூ.500 என மொத்தம் ரூ.88 ஆயிரம் அபராம் விதிக்கப்பட்டது.
