Rs 5 lakh to Rs 1 crore to start business for youth
சிவகங்கை
சிவகங்கையில் தொழில் முனைவோராக விரும்பும் முதல் தலைமுறை இளைஞர்களுக்கு ரூ.5 இலட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடனுதவி அளிக்கப்படுகிறது என்றும் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் சிவகங்கை மாவட்டத் தொழில் மையத்தின் மேலாளர் கணேசன் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத் தொழில் மையத்தின் மேலாளர் கணேசன் (பொறுப்பு) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழக அரசு மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் முதல் தலைமுறை இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க ரூ.5 இலட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான திட்ட மதிப்பில் வங்கிகள் மூலம் கடனுதவி பெறலாம்.
கடன் தொகையில் அரசின் மானியமாக 25 சதவீதம் வழங்கப்படும். மேலும், கடனுக்கான வட்டி விகிதத்தில் 3 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், வரையறுக்கப்பட்ட வங்கிகள், காரைக்குடியில் செயல்படும் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் பாண்டியன் கிராம வங்கிகள் மூலமாக கடனுதவி வழங்கப்படுகிறது.
விண்ணப்பித்த இளைஞர்கள் வங்கிகளில் கடனுதவி பெறவும், மின் இணைப்பு விரைவாக பெறவும் மற்றும் பல்வேறு உரிமங்கள் விரைவில் கிடைத்திடவும் வழிவகை செய்யப்படும்.
கடன் வழங்குவதில் மகளிருக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு, ஆதி திராவிடர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை உண்டு.
இந்தத் திட்டத்தின் மூலம் கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி ( ஐடிஐ ) இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர் 35 வயதுக்குள்ளும் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஏற்கெனவே மத்திய, மாநில அரசின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெற இயலாது. விவசாயம், வாகனம், மாசினை ஏற்படுத்தும் தொழில்கள் போன்ற ஒரு சில தொழில்கள் தவிர்த்து,உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்" என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
